Viking Textiles Private Limited - Find us on Map

Talk to Our Officers

+ 91 98427 44434

Yarn / Fabric

Price List

வறுமையை வென்ற 'வைகிங்' ஈஸ்வரன்!

எல்லா மனிதர்களும் இரண்டு கைகளோடுதான் பிறக்கிறார்கள். வாழ்க்கையில் முன்னேற மூன்றாவதாக இன்னொரு கை தேவைப்படுகிறது. அந்தக் கைதான் இந்த உலகத்தைத் தொடர்ந்து இயக்கிக் கொண்டிருக்கிறது. இரண்டு கைகள் இல்லாத மனிதன்கூட, மூன்றாவது கையாக தன்னம்பிக்கையைக் கொண்டிருந்தால் சாதிக்க முடிகிறது. வாழ்வதற்கு அடிப்படைத் தேவையான மூன்று வேளை உணவுக்கே கஷ்டப்படுகிற நிலையிலிருந்த என்னை, தன்னம்பிக்கைதான் கைதூக்கிவிட்டது" அழுத்தம் திருத்தமாக தனது அனுபவத்தைச் சொல்கிறார் `வைகிங் ஈஸ்வரன்.

ஆறணா கட்டணம் கொடுத்து டவுன் பஸ்ஸில் பயணிக்க முடியாதவர், இன்று ஆண்டுக்கு 400 கோடி ரூபாய் வர்த்தகம் செய்கிற நிறுவனங்களின் தலைவராக உயர்ந்திருக்கிறார்.ஏறத்தாழ 4,000 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தந்திருக்கிறார். ஆனந்த் ஓசரீஸ், ஆனந்த் டெக்ஸ்டைல்ஸ், வைகிங் நிட்டர்ஸ், வைகிங் டெக்ஸ்டைல்ஸ், வைகிங் நெட் பிராசஸ், பிரேமானந் டெக்ஸ்டைல்ஸ் ஆகிய நிறுவனங்களின் அஸ்திவாரமும் கோபுரமும் ஈஸ்வரன்தான்.

அறியாமையால் தொலைத்த கல்வி!

"அப்பாவுக்குச் சொந்தமாக இரண்டு ஏக்கர் வானம் பார்த்த பூமி இருந்தது. அதுதான் எங்களின் வாழ்வாதாரம். மழை பெய்தால் வேலை இருக்கும். மழை பொய்த்துப்போனால் சாப்பாட்டுக்கே கஷ்டமாகிவிடும். எங்கப்பா என்னைய அஞ்சாம் வகுப்பு வரைக்குமாவது படிக்க வெச்சிரணும்னு தலைகீழா நின்னு பார்த்தார்.

என்ன ஆனாலும் பள்ளிக்கூடம் மட்டும் போகமாட்டேனு அடம்பிடித்த நாளில் இருந்து, நான் ஒரு குழந்தைத் தொழிலாளியாக மாறினேன். படிக்காம போனதுக்காக வாழ்க்கையில் பலமுறை வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறேன். கற்ற கல்வியை முன்னேற்றத்துக்கான ஏணி என்பார்கள். அறியாமையில் அந்த ஏணியை எட்டி உதைச்சிருக்கேனு அப்ப தெரியாது. அதற்கு நான் வாழ்க்கையில் கொடுத்த விலை ரொம்ப அதிகம்.

தொழில் செய்யும்போது, சொந்தமா முடிவு எடுக்க முடியாம, அடுத்தவர்களைச் சார்ந்தே இயங்கவேண்டிய நிலையில் தவிச்சிருக்கேன். சில தவறுகளை உணரும்போது, திருந்துவதற்கான வாய்ப்பை இழந்திருப்போம். பள்ளிக்குப் போனால், படிப்பதற்கு நிறைய கஷ்டப்பட வேண்டும் என்று தேவையில்லாமல் பயந்த நான், சின்ன வயதிலேயே வேலைக்குப்போய் ரொம்பவே கஷ்டப்பட்டேன்.

விவசாயத்தில் தொடங்கிய வாழ்க்கை!

மாடு மேய்ப்பது தொடங்கி, நிலத்தில் விவசாயம் சார்ந்த எல்லா வேலைகளையும் பத்து வயசுலயே செஞ்சிருக்கேன். படிப்பு இல்லாத நிலையில, சலிக்காம உழைத்தால் மட்டுமே ஒரு அடியாவது முன்னேற முடியும் என்கிற உண்மையை உணர்ந்தே இருந்தேன். மாடுகட்டி ஏத்தம் இறைக்கிறதுல தொடங்கி, விதைத்து அறுவடை செய்யும்வரை விவசாயம் சார்ந்த அனைத்து வேலைகளிலும் தேர்வு வைக்காமலேயே தேர்ச்சி அடைஞ்சேன்.

விவசாயம் செய்கிறவர்களுக்கு வாழ்க்கையில் வேறு வசதிகள் கிடைக்காமல் போனாலும், உணவுக்கு கஷ்டப்படவேண்டிய நிலைமை வராதுங்கிற நம்பிக்கையைத் தகர்த்தது பஞ்சகாலம். பஞ்சத்துல அடிபட்டவன் மாதிரி இருக்கிறாயே னு யாராவது சொன்னால், அதன் அர்த்தம் எனக்கு முழுசா புரியும். பலமாக பஞ்சத்தில் அடிபட்டிருக்கிறேன். இயற்கையின் கருணை குறைந்து, மழை பொய்த்துப் போனதால் விளைச்சல் இல்லை. தங்கம் கடத்துவதுபோல, அரிசி மூட்டைகளை கடத்தினாங்க. அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கினாங்க. உணவுப் பஞ்சம் தலைவிரித்து ஆடியது.

கற்றாழை கிழங்குதான் உணவு...

பள்ளிக்கூடம் போகாமல் தினம் வயலுக்கு வந்து கற்றுக்கொண்ட வேலை, கடைசியில் சோறு போடவில்லை. ஒரு வேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டோம். சாலையோரம் கேட்பாரற்று விளைந்து கிடக்கிற கற்றாழை கிழங்குதான் பெரும்பாலும் உணவாக இருக்கும். அப்போது வறுமையின் சின்னம் அதுதான். கற்றாழைக்கிழங்கை விடிகிறவரை தீயில் போட்டு எரிச்சாதான், அதை மாவாக்கி சாப்பிட முடியும்.

மாட்டுக்குகூட நல்ல தீனி போடணும்னு நினைக்கிற விவசாயிகளுக்கு, ரேஷன் கடையில் ரெண்டு கிலோ புழுத்த அரிசி கிடைச்சா, அதுவே அமிர்தம். ஆடு, மாடு மேய்த்தாவது பிழைத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையும் பொய்யானது. அந்த வேலைகூட கிடைக்காமல், பூமியே காஞ்சிக்கிடந்த காலம். நான் ஜல்லி உடைக்கும் வேலைக்குப் போனேன். சாப்பாடு இல்லாமல் உழைக்க, உடம்பில் தெம்பும் இல்லை. உடைச்ச ஜல்லிக்கும், கிடைச்ச கூலிக்கும் இமயமலை வித்தியாசம்.

எங்கப்பா, ஏதாவது டீக்கடைக்கு வேலைக்குப் போறீயா ஈஸ்வரா? னு கேட்டாரு. ஏதாவது ஒரு வேலை கிடைச்சா போதும்ங்கிற மனநிலையில், நானும் `சரிங்கய்யா னு தலையாட்டினேன்.

அம்மாச்சியின் எதிர்ப்பு!

`பாராட்டி, சீராட்டி வளர்த்த பேரனை, டீக்கடையில் எச்சி கிளாஸ் கழுவ அனுப்புனா சும்மா இருக்க மாட்டேன் னு கொந்தளிச்சாங்க அம்மாச்சி. அம்மாவைவிட என்னை அதிகம் நேசிச்சு, அரவணைப்பு கொடுத்த ஜீவன். அழணும்னு தோணுச்சுனா, அவங்க மடிதான் அடைக்கலம். சின்ன வயசுலேயே அம்மாச்சியின் மூலம் எனக்கு அதிர்ஷ்டம் கிடைத்தது. கஷ்டங்களைக் கடந்து வரவும், முடங்கிவிடாமல் போராடி வெல்லவும் அம்மாச்சி தந்த ஆதரவும், ஊக்கமும் இந்த ஜென்மத்துக்கு மறக்க முடியாது.

டீக்கடை வேலைக்குப் போகவே கூடாது என்ற பாட்டியின் கட்டளையை ஏற்று, வேறு வேலை தேடினேன். என் சொந்த ஊரான அணைப்புதூர்ல இருந்து 10 கிலோமீட்டர் தொலைவுல இருக்கிற திருப்பூரே, எங்களுக்கு சிங்கப்பூர்தான். பஞ்சத்தில் சிக்கிய பல ஆயிரக்கணக்கான மக்களை மீட்ட, உழைப்பாளர்களின் சொர்க்க பூமி அது. தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் வேலை தேடி மக்கள் திருப்பூருக்கு வருவாங்க.

திருப்பூரில் வேலைதேடும் படலம்!

நானும் என்னுடைய வேலை தேடும் படலத்தை திருப்பூரில் தொடங்கும்போது எனக்கு வயது 12. ஒல்லியாகவும், குள்ளமாகவும் இருந்துகொண்டு, வேலை கேட்கிற என்னை மேலிருந்து கீழாக பார்ப்பதிலிருந்தே, கண்ணு முன்னால நிக்காத என்று சொல்லாமல் சொல்லிவிடுவார்கள்.

ஒரு கம்பெனியில் சம்பளம் இல்லாமல் வேலை செய்யறீயானு கேட்டாங்க. டெக்ஸ்டைல் துறையில் எந்த வேலையும் தெரியாம வேலை கேட்டால், சம்பளம் இல்லாத வேலைதான் கிடைக்கும்னு புரிஞ்சது. என்ன வேலை தெரியும்? என்று கேட்கும்போது, எந்த வேலையா இருந்தாலும் கத்துக்கிறேன் என்று நான் சொல்கிற பதிலை, முதலாளிகள் ரசிக்கலாம்.

அதற்காக வேலை தெரியாதவனுக்கு சம்பளம் தரமுடியாது. முதலில் வேலையை கத்துக்கலாம் என்று, சம்பளம் இல்லாத வேலைக்கு ஒத்துக்கிட்டேன். ஆனால், டீ, காபி வாங்கி வருவதும், ஆபீஸை சுத்தமாகப் பெருக்கி துடைப்பதும்தான் என்னுடைய பிரதான வேலையாக இருந்தது. வேலை கற்றுக்கொள்ள நினைத்த எனக்கு ஏமாற்றம். அந்த கம்பெனி ஏற்கெனவே நஷ்டத்தில் போய்க்கொண்டிருந்ததால், எப்போது மூடுவார்கள் என்றே தெரியாமல் இருந்தது.

4 மணி நேரம் நடை... திரும்பியபோது வெறுங்கை...

ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் நடந்து சென்று, பத்து மணி நேரத்துக்கும் அதிகமா கம்பெனியில் இருந்துவிட்டு, வெறுங்கையோடு வீட்டுக்குத் திரும்பி வருவேன். கிடைக்கிற இடைவெளியில், ஏகலைவனைப்போல வேலைகளை மனதில் ஏற்றி, மற்றவர்களுக்கு உதவி செய்து, கொஞ்ச கொஞ்சமாக கத்துக்கிட்டேன்.

நஷ்டத்தில் நடக்கும் நிறுவனம், கஷ்டத்தில் நகரும் என் வாழ்க்கை இரண்டுக்கும் ஒத்துப்போகவில்லை. புளித்துப்போன கூழோ, பழைய சாதமோ கொண்டுசெல்ல பளபளப்பான பித்தளை தூக்குப்போசியை தூக்கிக்கொண்டு, கௌரவத்துக்காக வேலைக்குப் போய்வருகிற நிலையில் நான் இல்லை. திருப்பூர் நகரம் முழுவதும் வேறு வேலை தேடினேன்.

பெரிய போராட்டத்துக்குப் பிறகு ஒரு நிறுவனத்தில் வேலைக்கு எடுத்துக் கொண்டார்கள். ஒரு வாரம் வேலை செய்த பிறகு, முதல் வாரத்தின் கூலியாக இரண்டு ரூபாய் கொடுத்தார்கள். வாழ்க்கையில் முதன்முதலாக சம்பளமாக வாங்கிய அந்த இரண்டு ரூபாய் பரவச உணர்வைக் கொடுத்தது. சலவை நோட்டாக

கொடுத்தார்கள். சட்டைப் பையில் வைத்த அந்த இரண்டு ரூபாய் நோட்டு கசங்கிவிடக்கூடாது என்கிற கவனத்தோடு வீட்டுக்கு நடந்த அந்த வெற்றி நடை இன்னும் ஞாபகம் இருக்கு.

ஏதோ சாதித்த உணர்வோடு மகிழ்ச்சியில் இருந்தேன். இரண்டாவது வாரத்தில் என்னுடைய கடுமையான உழைப்பை மதித்து மூன்று ரூபாயாக கூலியை உயர்த்தினாங்க. சந்தோஷம் சிறகடிக்க, வேலை பார்த்துக் கொண்டிருந்த என்னையும், என் வயதுள்ள இன்னும் சில சிறுவர்களையும் அழைத்து, உடனடியாக டாக்டர்கிட்ட சர்டிபிகேட் வாங்கிவர வேண்டும் என்று சொன்னாங்க.

முதல் வேலைக்கே ஆப்பு!

`உனக்கு இன்னும் 16 வயது ஆகவில்லை. அதனால் நிறுவனத்தில் வேலை செய்ய முடியாது. 12 வயசுக்கெல்லாம் சர்டிபிகேட் தரமுடியாது. போய் ஒழுங்கா ஸ்கூல்ல படி என்று மருத்துவர் கூறிவிட்டார். சான்றிதழ் வாங்கப்போன நான்கு பேரில், எனக்கு மட்டும் சான்றிதழ் கிடைக்காமல் வேலை பறிபோனது. `எந்த சந்தோஷமும் ஒரு மாசம்கூட நிலைக்க மாட்டேங்குதே னு எனக்கு கண்ணீர் பெருகியது.

முதல் வகுப்புகூட முடிக்காத நிலையில், 12 வயசுல எந்த வகுப்பில் சேர்ந்து நான் படிக்கிறது? மீண்டும் வேறு வேலை தேடும் முயற்சியில் இறங்கினேன். சான்றிதழ் இல்லாமல் வேலை தரும் நிறுவனத்தை தேடி அலைஞ்சேன். `சார், வேலைக்கு ஆள் வேணுமா? என்று ஒரு கம்பெனியில் நான் கேட்டதைப் பார்த்து, நீதான் அந்த ஆளாடா? என்று அதட்டலுடன் கேட்டார் முதலாளி.

பரிதாபமாக முகத்தை வைத்துக்கொண்டு, ஆமாம் என்று தலையாட்டுகிற சிறுவனைப் பார்த்தவருக்கு, இரக்கம் வந்துவிட்டது. அவர் கம்பெனியில் ஆள் பற்றாக்குறை காரணமாகவும் என்னை வேலைக்கு சேர்த்துக் கொண்டார். புதிய வேலையில் புதிய பிரச்சினையை சந்தித்தேன்.

 

 

இரவு 2 மணிக்கு எழுந்து...

மின்சாரப் பிரச்சினையால் திருப்பூரில் பாதி தொழிற்சாலைகள் காலை 6 மணிக்கே ஷிப்ட் தொடங்க வேண்டும் என்று புது உத்தரவு அமலுக்கு வந்தது. அதிகாலை நாலு மணிக்கு எழுந்தால்தான் 10 கிலோமீட்டர் தூரம் நடந்து வந்து, காலை 8 மணிக்கு நான் திருப்பூரில் இருக்க முடியும். ஆறு மணி ஷிப்ட் என்றால் இரவு இரண்டு மணிக்கே எழுந்தாகணும். வீட்டில் மணி பார்க்க கடிகாரமே இல்லாத அளவுக்கு வறுமையான சூழல்.

என் அப்பா வானத்தில் நட்சத்திரம் பார்த்து, இரண்டு மணிக்கு எழுப்பி விடுவார். மழைக் காலமாக இருந்தால் நட்சத்திரங்கள் தெரியாது. விடிந்துவிட்டதாக நம்பி நள்ளிரவிலேயே கிளம்பி, காலை 4 மணிக்கெல்லாம் கம்பெனி வாசலில் உட்கார்ந்து தூங்கிய அனுபவம் உண்டு. இப்படிபட்ட உழைப்புக்கு இரண்டேகால் ரூபாய் கூலியாக கிடைத்தது.

பஸ்ஸில் பயணிக்க ஆசை!

எப்போதும் நடந்தே வேலைக்கு வருகிற எனக்கு, ஒரு நாளைக்காவது பஸ்ஸில் போய் ஊருக்குள் இறங்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. திருப்பூரில் இருந்து அணைப்புதூர் செல்வதற்கு ஆறணா கட்டணம். ஒவ்வொரு வாரமும் கூலி வாங்கும் நாளில் இந்த ஆசை மனதில் எட்டிப் பார்க்கும். இன்னிக்கு மட்டும் பஸ்ஸுல ஊருக்குப் போனா என்னா? என்ற ஆசை வந்த அடுத்த கணமே, அவ்ளோ பணம் செலவழிக்க முடியாதே என்ற யாதார்த்தமும் உறைக்கும்.

இரண்டு ரூபாய் நோட்டை வீட்டில் கொடுத்துவிட்டு, நாலணாவைப் பயன்படுத்தி ஒரேயொரு முறை பஸ்ஸில் போக முடிவெடுத்தேன். திருப்பூரில் இருந்து பாதி தூரம் நடந்து சென்று, அங்கு பஸ்ஸில் ஏறினால், நாலணாவுக்கு டிக்கட் எடுத்து ஊருக்குள்போய் இறங்கிவிடலாம் என்று கணக்குப் போட்டேன். குறிப்பிட்ட நேரத்துக்குத்தான் பஸ் வசதி உண்டு. அதனால், வேலை முடிந்து பஸ்ஸுக்கு முன்னால் போய்விட வேண்டும் என்று மூச்சிறைக்க ஓடினேன். இப்போது நினைத்தாலும் கண்ணீர் வருகிற நிகழ்வு அது.

ஒரு சிறுவன் மூச்சிரைக்க ஓடுவதை மற்றவர்கள் வேடிக்கைப் பார்த்தார்கள். ஆசை துரத்த ஓடிய ஓட்டத்தில் பஸ் வருவதற்கு முன்பே போய் சேர்ந்தேன்.

ஏமாற்றமும்...கண்ணீரும்...

பஸ்ஸில் போய் ஊர்ல இறங்கணும் என்று பெருங்கனவோடு பஸ் ஏறியவனிடம், எங்கு ஏறினாலும் அணைபுதூர் போக ஆறணா டிக்கட் என்று கண்டக்டர் சொன்னதும், அங்கேயே கண்ணீர் வந்துவிட்டது. இரண்டணா கூடுதலாக கொடுக்க பணமும் இல்லை. மீண்டும் இறங்கி, நடந்தே வீட்டுக்குப் போனதும், நான் அழுவதற்காக காத்திருந்தது என் அம்மாச்சியின் மடி. டவுன் பஸ்ஸில் ஆசைக்காக ஒருமுறைகூட பயணிக்க முடியாத அவலம், என்னை மிகவும் பாதித்தது.

ஊரில் பூர்வீக பூமியாக இருந்த இரண்டு ஏக்கர் நிலத்தை, புதிதாக மில் கட்டுவதற்காக விற்பனைக்கு கேட்டாங்க. சொந்த பூமியை விற்க முடியாது என்று நான் பிடிவாதமாக மறுத்தேன். ஊர்ல ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். அதை தடுக்கிறீயே ஈஸ்வரா. வேணும்னா உனக்கும். உன் தம்பிக்கும் இதே மில்லுல வேலை போட்டுத்தர்றோம் என்று உறுதி அளித்தார் மில் முதலாளி.

விற்கப்பட்ட நிலமும்... அவமானமும்...

ஊரில் பலருக்கு வேலை கிடைக்கும் என்பதுடன், என்னுடைய பத்து கிலோமீட்டர் பயணத்துக்கும் விடுதலை கிடைக்கும் என்பதால், சொந்த பூமியை விற்க ஒப்புக்கொண்டேன். எங்கள் நிலத்தில் பஞ்சாலை கட்டி, வெற்றிகரமாக ஓடத் தொடங்கியது. எனக்கும், தம்பிக்கும் வேலை தருவதாக சொன்னவர், எங்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. பலவிதமான முயற்சிகளுக்குப் பிறகு மில் முதலாளியைச் சந்தித்து, எனக்கும், என் தம்பிக்கும் வேலை கேட்டேன். கட்டடம் கட்ற வேலைதான் இப்ப காலியா இருக்கு. அதை வந்து செய் என்று அலட்சியமாக

சொன்னார். `நீங்க சொன்னபடி வார்த்தையை காப்பாத்தலையேனு நான் கேட்டபோது, வாரக் கூலி தானே நீ. அதிகாரமா வேலைகேக்குற என்று அவமானப்படுத்தினார்.

உறவுகள் சூழ்ந்திருக்கும் சொந்த ஊரில் நடந்த இந்த அவமானம், என் வாழ்வில் ஆறாத காயமாக மாறியது. அது ஆறாத காயமல்ல. இறைவனின் தீராத கருணை என்று எனக்கு அப்போது புரியவில்லை.