Viking Textiles Private Limited - Find us on Map

Talk to Our Officers

+ 91 98427 44434

Yarn / Fabric

Price List

சாதனை முகங்கள்-தி இந்து தமிழ்.


ஒரு மில் தொழிலாளியாகவே வாழ்ந்திருக்க வேண்டிய எனக்குள், மில்லுக்கே முதலாளியாக வேண்டுமென்ற பெரிய கனவை விதைத்தது எனக்கு நேர்ந்த அவமானம். `கூலிக்காரன் தான நீ? அதிகாரம் பண்ற? என்று வேலை கேட்டுப்போன இடத்தில் அந்த முதலாளி என்னைப்பார்த்து கேட்காமல் போயிருந்தால், சாதாரணமான வாழ்க்கையையே வாழ்ந்திருப்பேன்.

அதனால், வாழ்வில் அவமானம், ஏமாற்றம், தோல்வி எல்லாம் வந்தால், நம்முடைய பலத்தை வெளிப்படுத்த கிடைத்த வாய்ப்பு என்று இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள் என்கிற வைகிங் ஈஸ்வரன், தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் பொறுப்பில் இருக்கிறார். நொறுங்கிப் போயிருக்க வேண்டிய தருணத்தில் நிமிர்ந்து நின்று, முதலாளியாக மாற வைராக்கியத்துடன் உழைத்து முன்னேறிய கதையைத் தொடர்கிறார் ஈஸ்வரன்.

"அவமானத்தில் காயப்பட்டு, சுருண்டு கிடந்த என்னைத் தேற்றினார் அம்மாச்சி. வீட்டில் இருப்பவர்கள் பழைய வேலைக்கே போகும்படி என்னிடம் வலியுறுத்தினர். இனிமே என்னால யார்கிட்டேயும் கைகட்டி கூலி வேலை பார்க்க முடியாது என்று உறுதியா சொன்னதும், வேற என்ன பண்ணப் போறே? னு கேட்டாங்க. சொந்தமா பனியன் கம்பெனி ஆரம்பிக்கப் போறேன் னு சொன்னதும் அதிர்ச்சியானங்க.

வறட்டு கௌரவத்தில், முரட்டு தைரியத்தோடு நான் சொன்னதை எல்லோரும் எதிர்க்க, பாட்டி மட்டும் ஆதரவுக்கரம் நீட்டினார். நமது லட்சியத்தைப் புரிந்துகொள்ளக்கூடிய ஒருவரையாவது வாழ்வில் சம்பாதித்துவிட்டால், அதுவே முதல் வெற்றி. ஈஸ்வரன் வேலைய விட்டுட்டான், சொந்தமா மில் ஆரம்பிக்கப் போறானாம் என்ற செய்தி, அணைப்புதூரில் அப்போதைய பிரபலமான நகைச்சுவை.

சிறுகச் சிறுக சேர்த்த இரண்டாயிரம் ரூபாயும், பாட்டியின் நகையும், நெஞ்சம் நிறைய நம்பிக்கையும் முதலீடாக மாறியது. அதற்கு முன் சைக்கிள் கடையும், மளிகைக் கடையும் நடத்திய அனுபவம் மட்டுமே இருந்தது. என்னோட 10 கிலோமீட்டர் நடைபயணத்துக்குத் தீர்வா, குறைந்த விலையில், துருப்பிடித்த நிலையில் இருந்த பழைய சைக்கிளை வாங்கிக் கொடுத்தார் அப்பா. அந்த சைக்கிள் அடிக்கடி ரிப்பேராகும்போது, அதை செலவில்லாமல் நானே பழுது நீக்க பழகினேன்.பஞ்சர் ஒட்டுவதில் தொடங்கி, மொத்தமாக பிரித்துப்போட்டு ஒவராய்லிங் செய்து மீண்டும் மாட்டுவது வரை நானே செய்வேன். அந்த சைக்கிளை வைத்து ஒரு புது தொழிலையே கற்றுக்கொண்டேன்.

வாடகை சைக்கிள் கடை!

கொஞ்சம் கொஞ்சமாக சேமித்த பணத்தை வெச்சி, 10 சைக்கிள் வாங்கி உள்ளூரில் வாடகைக்கு விட்டிருந்தேன். சொந்தமாக நான் தொடங்கிய முதல் தொழில் முயற்சி அதுதான். அப்பா பகலில் கடையைப் பார்த்துக்கொள்ள, வேலை முடிஞ்சி வந்து நான் கடையைப் பார்த்துக்குவேன். அப்படியே சைக்கிள் கடைக்குப் பக்கத்துல, சின்னதா ஒரு மளிகைக் கடையைத் தொடங்கினோம். மெதுவாக வாழ்க்கைத் தரம் மாறத் தொடங்கியது. வறுமையிலிருந்தும் கொஞ்சம் கொஞ்சமாக விடுபடத் தொடங்கினோம்.

இந்த அனுபவத்தை வெச்சிட்டு, ஒரு மில் கட்டும் முயற்சியில் இறங்குவது, நீச்சல் அடிப்பது எப்படி? னு புத்தகம் படித்துவிட்டு, கடலில் குதிப்பதற்கு சமமான முயற்சினு எனக்கு அப்போது தெரியாது.

சின்ன வயசுல இருந்தே, பெரிய விஷயங்களை கற்பனை பண்றது எனக்கு ரொம்பப் பிடிக்கும். திருப்பூருக்கு வேலை தேடிப்போன காலத்துல சுப்பிரமணினு ஓர் உயிர் நண்பன் இருந்தான். அவன் வீடு எங்க வீட்டைவிட வறுமையானது. தூக்குப்போசியில் பழைய சோறை, உப்பு போட்டு எடுத்துக்கிட்டு திருப்பூர் பனியன் கம்பெனிக்கு வேலைக்குப் போறப்ப, ஒரு பெரிய கேட் பார்த்ததும், எங்க கால்கள் தானா நின்னுடும்.

`திருப்பூர் கிளப் கேட்டும், தலைவர் பதவியும்...

பிரம்மாண்டமான அந்தக் கதவை பிரம்மிப்பா நின்னு பார்க்கிறதுதான் எங்க பொழுதுபோக்கு. திருப்பூர் கிளப் னு பெருசா போர்டு இருக்கும். விலை உயர்ந்த காருங்க உள்ள போயிட்டு வர்றதை தினமும் நின்னு வேடிக்கைப் பார்க்கிற எங்களை விரட்டுறதுதான், வாட்ச்மேனுக்கு முக்கிய வேலை.

பெரிய கேட்டுக்கு அந்தப் பக்கம் உள்ளாற என்ன இருக்குனு ஒருமுறை பார்க்கணும்டா னு நான்

சொன்னதும், சுப்பிரமணியால சிரிப்பை அடக்கவே முடியவில்லை. அடுத்த ஜென்மத்துல பனியன் கம்பெனி முதலாளியா பொறந்தா, அப்ப போய் பார்க்கலாம் னு சொன்னான். ஏன் இந்த ஜென்மத்துல முடியாதா னு மனசுக்குள்ள நினைப்பேன். தொழிலில் நல்ல நிலைக்கு வந்தபிறகு, பத்து வருஷம் அதே திருப்பூர் கிளப்க்கு தலைவரா இருந்திருக்கேன். என் காரைப் பார்த்ததுமே பரபரப்போடு வந்து, அந்தப் பெரிய கேட்டை திறந்துவிட்டு, சல்யூட் வைப்பாரு வாட்ச்மேன். முன்னேறணும்னு முடிவு பண்ணிட்டா, எந்த கதவா இருந்தாலும் ஒரு நாள் நிச்சயமா திறக்கும்னு நினைச்சுக்குவேன்.

குறிப்பிட்ட நேரத்துல மட்டும் நமக்கு காது கேட்காம போயிட்டா, ரொம்ப நல்லது. நாம முயற்சி செய்யலாம்னு நினைக்கும்போதே, அது முடியாதுனு சொல்ல 10 பேர் இருப்பாங்க. பனியன் கம்பெனியின் வாரக்கூலி வேலையை விட்டுட்டு, பனியன் கம்பெனி ஆரம்பிக்கப்போறேன்னு சொன்ன பிறகு கிடைத்த அறிவுரைகளைத் தொகுத்திருந்தால், இரண்டு புத்தகமே போட்டிருக்கலாம். அது கஷ்டம், பேராசை, தேவை இல்லாம ரிஸ்க் எடுக்கிறனு விதவிதமா பயமுறுத்தினாங்க. அதுக்கு காதுகொடுத்து, கொஞ்சம் தயங்கியிருந்தாலும் என் வாழ்க்கை வாரக்கூலியாகவே முடிந்திருக்கும். நான் எதையும் காதில் வாங்கவே இல்லை.


மொழியும் தெரியாது... கணக்கும் புரியாது...

என்னால தரமான ஆடைகளை உற்பத்தி பண்ண முடியும்ங்கற நம்பிக்கை இருந்தது. ஆனா, எப்படி விக்கிறதுனு தெரியாது. அதை கத்துக்கலாம்னு துணிச்சலா முடிவெடுத்தேன். அணைப்புதூர், அவிநாசி, திருப்பூர் இந்த மூணு ஊர்களைத் தவிர வேறு உலகம் தெரியாத நான், வட இந்தியா வரைக்கும் போய், பனியன்களை விற்கணும். இங்கிலீஷ், இந்தி இரண்டுமே தெரியாது. கணக்கு வழக்கும் சுத்தமா தெரியாது. வியாபார வளர்ச்சிக்குத் தேவையான நெளிவுசுளிவும் வராது. இதையெல்லாம் தெரிஞ்ச ஒருத்தரு நம்மகூட இருந்தாருன்னா, சமாளிச்சிட முடியும்னு நினைச்சேன்.

நான் வேலை பார்த்த கம்பெனியிலிருந்து, சில குற்றச் சாட்டுகளின்பேரில் வேலையிலிருந்து நீக்கப்பட்ட சாமுவேல் என்பவரின் மார்க்கெட்டிங் திறமைமீது எனக்கு பெரிய நம்பிக்கை இருந்தது. அவர் திறமையானவரா இருந்தாலும், நேர்மையானவரா இல்லாமப் போனதால வேலை எதுவும் கிடைக்கலை. என்னாலயும் திறமையான ஒருத்தரை, அதிக சம்பளம் கொடுத்து வேலைக்கு சேர்க்க முடியாது. என் பலவீனம் அவருக்கு பலமாவும், அவர் பலவீனம் எனக்கு கழுத்துமேல தொங்குற கத்தியாவும் இருந்தது.

4 தையல் மிஷின்...

நான் சொந்தமாக தொழில் தொடங்கப் போறேன்னு சொன்னதும், சாமுவேல் என்னை ஊக்கப்படுத்தி உதவி செய்றதாகவும் சொன்னாரு. மண் குதிரைய நம்பி ஆத்துல இறங்குறோம்னு தெரிஞ்சே இறங்கினேன். ரூ.150 மாத வாடகைக்கு, நான்கு தையல் மிஷினோடு ஓர் இடம் கிடைத்தது. மூன்று பேரை வேலைக்கு எடுத்து, நான்காவது தொழிலாளியாக நானும் உற்பத்தியில் இறங்கினேன். தொழில் தொடங்கின பிறகு, எனக்கு இரவும் பகலும் ஒன்றானது. வீடு மறந்தே போனது. ஊர் நினைவிலேயே இல்லை. இன்னொரு அவமானத்தை சந்தித்துவிடக் கூடாது என்ற பயமே, என்னைத் தூக்கமின்றி உழைக்கத் தூண்டியது. ஆர்டர் கிடைக்காமல், பொருளைத் தயாரித்துப் பயனில்லை என்றுகூறி, தயாரிப்பை நிறுத்திவிட்டு, பம்பாய் அழைத்துச் சென்றார் சாமுவேல். பஸ்ஸில் பயணம் செய்கிற பரவசமே பாக்கியம் என்று கருதிய நான், முதன்முதலாக ரயிலில் ஏறினேன். கையில் கொஞ்சம் பணமும், மனசு முழுக்க பயமும் இருந்தது.

அனுமதிக்காத 5 ஸ்டார் ஹோட்டல்!

திருப்பூரில் பனியன் கம்பெனி வைத்திருக்கிறோம் என்று அறிமுகம் செய்து கொண்டதும், பம்பாயில் ஏஜென்சிக்காரர்கள் கெஸ்ட் ஹவுஸில் தங்க ஏற்பாடு செய்தார்கள். டைல்ஸ் ஒட்டிய அறையில் தங்கியது அது முதல் முறை. மும்பையில் 5 ஸ்டார் ஹோட்டலான தாஜ் ஹோட்டலுக்கு, வியாபார நிமித்தமான கூட்டம் நடப்பதாக அழைத்துப் போனார்கள். கசங்கிய சட்டையும், கொஞ்சம் அழுக்கான வேட்டியும் உடுத்தியிருந்த என்னை, ஹோட்டல் உள்ளே அனுமதிக்க முடியாது என்று உறுதியாக மறுத்துவிட்டது ஹோட்டல் நிர்வாகம். பனியன் கம்பெனி முதலாளி என்று சொல்லியும், அவர்கள் நம்பத் தயாராக இல்லை. பேன்ட், சட்டை அணிந்து வரும்படி, திருப்பி அனுப்பப்பட்டேன். தோற்றத்துக்கு கொடுக்கும் மரியாதை நிரந்தரமற்றதுனு நான் முழுமையா நம்பினேன். என் தயாரிப்பின் தரத்தைப் பார்த்த பிறகு, என்னை அவங்களே கூப்பிடுவாங்கனு காத்திருந்தேன். நம்பிக்கை வீண்போகலை.

சாருக்கு ஒரு சாயா!

என் தோற்றத்தைப் பார்த்து நெற்றி சுருக்கியவர்கள், என் சாம்பிள் பனியனை பார்த்ததும் உட்காரச்சொல்லி சாருக்கு ஒரு சாயா என்று புன்முறுவல் பூத்தார்கள். தரத்துக்குக் கிடைத்த மரியாதையை நினைத்து, சற்றுப் பெருமையாக இருந்தது. தரம்தான் நிரந்தரம் என்கிற உண்மையை சாருக்கு சாயா என்ற வார்த்தையில் உணர்ந்து கொண்டேன்.

முதல் பயணத்திலேயே எதிர்பார்த்ததைவிட நல்ல ஆர்டர் கிடைத்தது. சின்ன வயதில் பல நாள் சம்பளம் இல்லாமல் உதவியாளராக வேலைபார்த்த எனக்கு, ஒரு தனிப்பட்ட உதவியாளர் வைத்துக் கொள்ளும் அளவுக்கு முன்னேற்றம் கிடைத்தது. சில மாதங்களிலேயே 10 பேரை வேலைக்கு எடுக்க வேண்டிய அளவுக்கு ஆர்டர் கிடைத்தது. அடுத்தவர்களுக்காக வேகமாக வேலைபார்த்த நான், எனக்காக வெறித்தனமாக வேலைபார்த்தேன். சாமுவேலின் மார்க்கெட்டிங் திறமை, நல்ல வளர்ச்சியைக் கொடுத்தது. எங்கள் வீட்டில் அவரும் ஒரு அங்கமானார்.

எதிர்பாராத துரோகம்...

ஆனால், அவரது மனதில் உறங்கிக் கிடந்த மிருகம் திடீரென ஆட்டிவைக்க, ஆடிப்போனது என் வாழ்க்கை. எனக்கு வரவேண்டிய

மொத்த பணத்தோடு திடீரென்று காணாமல் போனார் சாமுவேல். எதிர்பார்க்காத அடி, தாங்க

முடியாத இடி. நம்பிய வாடிக்கையாளர்களிடம் கெட்ட பெயரையும், கடனுக்கு பொருள் கொடுத்தவர்களிடம் வசவுகளையும் வாங்கவேண்டும் என்று நினைத்ததுமே, வாழ்வதில் நம்பிக்கை தொலைந்தது. ஒரு அவமானத்தை தாங்க முடியாமல், சொந்தமாக கம்பெனி ஆரம்பித்து, பல பேரிடம் அவமானத்தை சம்பாதிக்கப் போகிறேனே என்ற கவலை என் தன்னம்பிக்கையைக் குலைத்தது. இதனால், தற்கொலை முடிவுக்குப் போனேன்.

ரயில் முன் விழுந்து தற்கொலை?

தூக்கம் இல்லாத துக்கமான அந்த இரவில், திருப்பூர் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்தேன். அதிகாலை 5 மணிக்கு ஒரு ரயில் வரும் என்று சொன்னார்கள். தண்டவாளத்தில் விழுந்து செத்துப்போகலாம் என்று தைரியத்தோடு தயாரானேன்.


வாழ்வதற்குப் பயமும், சாவதற்கு தைரியமும் சங்கமிக்கிற இடம் தற்கொலை முடிவு. ரயில் மோதி நம்முடைய உயிர் போய்விடும். ஆனால், அவமானம் சாகாவரம் பெற்று உயிர் வாழுமே என்ற எண்ணம் வந்ததும், சுதாரிக்கத் தொடங்கினேன். சாவதற்கு இருக்கும் தைரியத்தில் பாதியளவு இருந்தாலே வாழ்ந்து காட்டலாமே என்று ஒரு கணம் தோன்றியது. தற்கொலையின் விளிம்பில் நிற்பவர்கள் அந்த கணத்தைச் சந்தித்துவிட்டால், வாழ்க்கையில் ஜெயிப்பது நிஜம். நான் சந்தித்தேன்.

சாவதைப் பற்றி ஓர் இரவு முழுக்க யோசித்த நான், வாழ்வதைப் பற்றி ஒரேயொரு கணம்தான் யோசித்தேன். ஈஸ்வரனை, கோடீஸ்வரனாக்கிய கணம் அதுதான். நேரே அம்மாச்சியின் மடியில் விழுந்து, அழுது தீர்த்தேன்.

விடாமுயற்சி தந்த வெற்றி!

இனி யாரையும் நம்பாமல், மார்க்கெட்டிங் பொறுப்பையும் நானே ஏற்பது என்று முடிவு செய்தேன். அந்த நிமிடம் வரை, வங்கியில் பணம் போடவோ, எடுக்கவோ தெரியாது. இங்கிலீஷ் என்றாலே மயக்கம் வரும். காசோலையில் நிரப்பவேண்டிய தொகையை, தமிழில் எழுதிய கம்பெனி முதலாளி நானாக மட்டும்தான் இருக்கும். என்னை நிமிர்ந்து பார்த்த வங்கி அதிகாரியிடம், எனக்கு அதுதான் தெரியும், என்ன பண்றது? என்று கேட்டேன். தேவைகள்தானே வாழ்வைத் தீர்மானிக்கும். ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் என்று புதிய பயணம் தொடங்கியது. விடாமுயற்சிக்கு முன்னால், பிரச்சினைகள் எல்லாம் தூசுதுரும்புதான்.

வாடிக்கையாளருக்குத் தேவை தரமான பொருள். எனக்கு தேவை ஆர்டர். இதற்கு மொழியோ, கல்வியோ எதுவும் தடையாக இல்லை. ரயில் நிலையம் படுக்கையாக மாறியது. இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் கையேந்திபவன்கள் இருந்தன. பஸ்ஸின் கூரை மீது ஏறி, கூட்டத்தோடு கூட்டமாக உட்கார்ந்திருப்பேன். எப்படியாவது ஆர்டர் பிடிப்பதுதான் ஒரே கனவு. 50 டஜன் ஆர்டர் கிடைத்தால் மட்டுமே ஒரு டீ குடிப்பேன். சில நாட்கள் ஒரு டீயும் குடிக்க முடியாது. சில நேரம் ஒரே நாளில் ஆறேழு டீ கிடைக்கும்.

ஊர் ஊராகச் சுற்றி...

இப்படி எனக்குள்ளே டார்கெட் வைத்து வேலை செய்தது, நல்ல பலனைக் கொடுத்தது.வியாபாரத்தின் சூட்சுமங்கள் தெரிய ஆரம்பித்தன. ஆந்திராவில் ஆர்டர் கிடைக்கா விட்டால் சோர்ந்துபோய், திருப்பூருக்கு திரும்ப மாட்டேன். அப்படியே மகாராஷ்டிரா, குஜராத் என்று டார்கெட் முடியும்வரை சுற்றுவேன். மற்றவர்கள் முயல் வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தாலும், நான் மெதுவாக, இலக்கு நோக்கி ஒவ்வொரு அடியாக எடுத்துவைத்தேன்.

வர்த்தகம் பெருகி, வாழ்க்கை மலர ஆரம்பித்தது. ஒன்றுமில்லாதவன் என்று மற்றவர்கள் என்னை அலட்சியப்படுத்தியபோது, நான் உற்பத்தி செய்த பொருட்களின் தரம்தான் என்னை தொழிலில் நிலைக்க வைத்தது. உழைப்பையும், தரத்தையும் எப்போதும் நான் கைவிட்டதில்லை. அதேபோல, அவை இரண்டும் என்னை ஒருபோதும் கைவிடவே இல்லை. இன்று அடுத்த தலைமுறையினர் வந்து பொறுப்பை பகிர்ந்து கொண்டு, சிறப்பாக செயல்படுகிறார்கள்.


அதிர்ஷ்டத்தில் கிடைத்த வெற்றிக்கு எப்போதும் ஆயுள் குறைவுதான். பெரிய போராட்டத்துக்குப் பிறகு கிடைக்கிற வெற்றி, சுலபமாக நம்மைவிட்டுப் போய்விடாது. என் போராட்டங்களை நினைத்துப் பார்த்தால் எனக்கே பெருமையாக இருக்கும்"

என்கிற ஈஸ்வரனின் வெற்றி, ஒன்றை

தெளிவாக விளக்குகிறது. ஆசிரியர்களுக்கு மாணவர்கள் கிடைப்பதுதான் கஷ்டம். மாணவர்களுக்கு யார் வேண்டுமானாலும் ஆசிரியர்களாகிவிடுவார்கள். தன்னை ஏமாற்றியவர்கள், அவமானப் படுத்தியவர்களிடம்கூட நிறைய பாடங்களைக் கற்று, முன்னேறியுள்ளார் ஈஸ்வரன்.